Saturday, May 04, 2013

அயர்லாந்து, அம்பானி, சீனா மற்றும் சில

அயர்லாந்து, அம்பானி, சீனா மற்றும் சில

1. 6 மாதங்களுக்கு முன், அயர்லாந்தின் கருக்கலைப்புத் தடைச் சட்டத்தின் காரணமாக, சவீதா என்ற இந்தியப் பெண் அநியாயமாக உயிரிழந்தது நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்து, அங்கு கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்தியாவைப் போல, கூச்சல் போட்டு விட்டு விஷயத்தை சௌகரியமாக மறந்து விடாமல், அங்குள்ள அரசு, அயர்லாந்து தீவிர கத்தோலிக்க நாடாக இருந்தும், அச்சட்டத்திற்கு சில திருத்தங்களை கொண்டு வர இருப்பது வரவேற்கப்பட வேண்டியது. இதற்கு எதிர்ப்பாளர்கள் இருப்பினும், அங்குள்ள பெரும்பான்மை மக்களின் மனித நேயமும், நேர்மையும் பாராட்டத்தக்கது,

2. இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானிக்கு மகாராட்டிர அரசு, மக்கள் வரிப்பணத்தில் Z+ வகை பாதுகாப்பு வழங்கியிருப்பதை, சுப்ரீம் கோர்ட் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. சாமானியனுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலையும், தில்லியில் ஒரு 5 வயது சிறுமி அநியாயமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதையும் கோர்ட் சுட்டிக்காட்டியிருக்கிறது. பணக்காரர்கள் தனியார் பாதுகாப்புக்கான விலையை எளிதாக கொடுக்க இயலும் என்றும் கோர்ட் கூறியிருக்கிறது. கோடிகளில் புரளும் அம்பானி, மக்கள் பணத்தில் தனக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று சொல்லாதது அவரது வெட்கமின்மையை காட்டுகிறது.

3. நாலைந்து நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் பக்ராம் விமான தளத்திலிருந்து புறப்பட்ட போயிங் 747 வகை கார்கோ விமானமொன்று, கிளம்பிய சில நிமிடங்களிலேயே, தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது, அருகிலிருந்த ஒரு வாகனத்தின் டேஷ்போர்ட் கேமரா, 3 நிமிட வீடியோவாக அவ்விமானத்தின் மரணத்தை பதிவு செய்திருந்ததை, டிவியில் பார்த்தபோது சற்று கலக்கமாக இருந்தது. கூர்ந்த அறிவை ஆயுதமாக பயன்படுத்தி தொழில்நுட்பத்தில் எத்தனை உச்சம் தொட்டாலும், checklist தயாரித்து கவனமாக இருந்தாலும், நம்மை மீறி சிலபல விஷயங்கள் நடப்பதை நம்மால் தடுக்க முடியாது என்பது தெளிவு. அந்த வீடியோவை இங்கே காணலாம். http://edition.cnn.com/2013/05/01/world/asia/afghanistan-bagram-crash-video/?hpt=hp_mid


4. சீனா, இந்திய எல்லையிலிருந்து கிட்டத்தட்ட 18 கி.மீ உள்ளே வந்து, 5 ராணுவ கூடாரங்களை அமைத்து 18 நாட்களாக அழும்பு பண்ணிக் கொண்டிருப்பது குறித்த செய்திகளையும், விவாதங்களையும் ஆங்கில நியூஸ் சேனல்களில் பார்க்கையில், பரிதாபமாகவும் அதே சமயம் நகைச்சுவையாகவும் உள்ளது. இந்தியாவுக்கு வெளிநாட்டுக் கொள்கை என்று எதுவும் கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். முன்பொரு முறை, காஷ்மீர் வாழ் இந்தியருக்கு மட்டும் (இந்தியாவை வெறுப்பேற்றுவதற்காக) சீனா தனி வகை விசா வழங்கியபோதும், அருணாச்சலப்பிரதேசத்தை “தென் திபெத்” என்று கூறி வருவதற்கும், இந்தியா மினிமம் என்ன செய்திருக்க வேண்டும்? திபெத்தை disputed territory- யாகத்தான் இந்தியாவும் பார்க்கிறது என்றாவது (official ஆகவோ unofficial ஆகவோ) அறிவித்திருக்க வேண்டாமோ!

சீனா (தனக்குச் சாதகமான சூழல் என்று உணர்ந்து), நீரை சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது (testing the waters!). எதிர்காலத்தில் ஒரு சிறிய அளவுக்கான போருக்கான ஓர் ஆயத்தமாக இது இருக்கலாம். இந்த விஷயத்தில் பிஜேபி காங்கிரஸை விட எந்த விதத்திலும் பெட்டர் என்று கூற முடியவில்லை. அவர்கள் ஆட்சியில் இருந்திருந்தாலும், எதையும் கழட்டியிருக்க மாட்டார்கள் என்பது தான் யதார்த்தம்.

5. 20 ஆண்டுகள், பாகிஸ்தானிய இருட்டுச் சிறையில் உழன்று, அநியாயமாக, வஞ்சகமாக சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட சரப்ஜித் சிங்கை இப்போது மாவீரனாக, தேசிய நாயகனாக கொண்டாடுவதால் என்ன பயன்? அவரைப் போல பல நாடுகளில் பல இந்தியக் கைதிகள் பல வருடங்களாக உழன்று கொண்டிருக்கின்றனர். தமிழ் மீனவர்கள் சிங்களக் கப்பல் படையால் தாக்கப்படுவது ஒரு வழக்கமாகவே ஆகி விட்டது. எந்த இந்திய அரசுக்கும் தம் மக்கள் எங்கிருந்தாலும் காக்கப்பட வேண்டியவர்கள் என்ற பொறுப்பும் கிடையாது, உணர்வும் கிடையாது. இவை இருந்தால் மட்டுமே, சரியான துரித நடவடிக்கை என்பது சாத்தியம்.

6. சீக்கியர்களுக்கு எதிரான 1984 தில்லி வன்முறை சம்பந்தப்பட்ட ஒரு வழக்கிலிருந்து முக்கியக் குற்றவாளியான, மாஜி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமாரை, சாட்சியங்கள் வலுவாக இல்லாத நிலையில், கோர்ட் விடுவித்திருப்பது, சீக்கியர்களிடையே பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஜ்ஜன், ஜக்திஷ் டைட்லர், லலித் மகேன் (இவர் காலிஸ்தான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு இறந்தார்) ஆகிய மூவருக்கும் சீக்கியப் படுகொலையில் சம்பந்தமில்லை என்றால், எதால் சிரிப்பது (அ) அழுவது என்று புரியவில்லை! சீக்கியப் படுகொலை பற்றி அறிய:
https://en.wikipedia.org/wiki/1984_anti-Sikh_riots

மோடி அப்பழுக்கற்றவர் என்றெல்லாம் கூறவில்லை. குஜராத் படுகொலையை முன் வைத்து காங்கிரஸ் கட்சி மோடியை வசை பாடுவது, அபத்த முரணாகத் தோன்றுகிறது.

7. பாமக தலைவர் ராமதாஸ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து வெடித்துள்ள வன்முறை, பொது அமைதிக்கு பங்கம் மற்றும் பெருமளவில் பொதுச்சொத்து நாசம் குறித்து, இது எதிர்பார்த்த ஒன்று என்பது தவிர கூற எதுவுமில்லை.
History has the bad habit of repeating itself.

2 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment

Srriram said...

அம்பானி போன்ற பிரமுகர்களுக்கு தீவிரவாதி மற்றும் கடும் குற்றவாளிகளால் அபாயம் நம்மை விட பல மடங்கு அதிகம்தான். பல கோடிகளை வரியாக கொடுப்பவர் பதிலுக்கு பாதுகாப்பு எதிர்பார்ப்பதில் என்ன தவறு ? ( அவர் வரியை முழுமையாக கொடுக்கிறாரா என்பது different topic.இதோடு தொடர்பு இல்லாதது)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails